நெற்றிச்சிறுபொட்டு அளவிலான
வட்டப்பூச்சி ஒன்று
என்னறைக்குள் வந்துவிட்டது.
வெளிச்செடியில்
வாழ்கின்ற எளியை அது.
எப்படியோ தவறி
உள்ளேகிச் சிக்கியது.
வெளியேற முயன்ற
அதன் முயற்சிகள் யாவும்
தோற்றன.
வேறு வழியின்றி
என் புழக்கமுள்ள இடமாகப் பார்த்து
இடைப்பட்டது.
முதலில் கணினித்திரையில்
எழுத்திடை ஊர்ந்தது.
அப்போதுதான் அதனை
முதன்முதலாகக் கண்டேன்.
விரலால் மெல்லத் தீண்டியதும்
விழுந்துவிட்டது.
மீண்டும் என் விரல்மீது
பறந்து வந்து அமர்ந்தது.
கையை அசைத்ததும்
பறந்து அகன்றுவிட்டது.
பிறகு
அதனைக் காணவில்லை.
இந்தப் பூச்சி
காதுக்குள் நுழைந்தால்
என்னாவது என்ற அச்சம்
ஒருநொடி தோன்றி அகன்றதுதான்.
பறக்கும் சிறுபூச்சி
தன்வழி பார்த்துக்கொள்ளுமென்று
மறந்துவிட்டேன்.
கணினி முன்னமர்ந்த மறுநாள்
என் புறங்கையில்
ஏதோ ஊர்வதுபோல் உணர்ந்தேன்.
அதே வட்டப்பூச்சி.
கையில் அமர்ந்தது
ஊர்ந்து நகரவில்லை.
எந்த விரைவையும் காட்டவில்லை.
‘அடடே நீ இன்னும்
இங்கேதான் இருக்கிறாயா ?’ என்றபடி
உற்று நோக்கினேன்.
காற்றில் மிதக்கும் துகள்போலிருந்த
தன் இருகைகளையும் குவித்து
வணங்குவதுபோல்
என்னைப் பார்த்து அமர்ந்திருந்தது.
கலங்கிவிட்டது
என் உயிர்.
“இருமுறை உன் கண்பட்டேன்.
என்னை நீ
ஏதும் செய்யவில்லை.
என்னைக் காப்பாற்றுவாயா ?” என்று
இறைஞ்சுவதுபோல் உணர்ந்தேன்.
”இந்த உலகம்
உன்னைப்போன்ற
சிற்றுயிர்களின் புகலிடம்” என்று
அதனிடம் கூறிக்கொண்டே
கையசைக்காது எழுந்து
வெளிச்சென்று
முற்றச்செடியருகே நின்றேன்.
என் கையிலிருந்து பறந்தோடி
செடியமர்ந்தது.
அச்செடியருகே
இனி நான் எப்போது சென்றாலும்
அதனுடைய
அதன் பிள்ளைகளுடைய
கைகுவித்த வணக்கத்தைக் காண்பேன்.