சிவப்பு மூக்கு ஆள்காட்டி பறவை உருவ அளவில் புறாவை போன்றது. ஆனால், உயரமான மஞ்சள் நிற கால்களைக் கொண்டது. பித்தளைப் பழுப்பு நிற மேற்புறம், வெந்நிற வயிறு மற்றும் தலை, முகம், மார்பு ஆகியவை கருப்பாகவும் இருக்கும். கண்ணுக்கு மேலிருந்து முன்புறமாக அலகு வரை சிவப்பு நிறத்தில் தோல் போன்று தடித்த பாகத்தை உடையது. ஆள்காட்டிகள் திறந்த வெளிகளாக உள்ள கரடு முரடான தரிசு நிலங்களிலும் உழுத நிலங்களிலும் நீர் உள்ள குளம் குட்டைகளின் கரைகளிலும் காணப்படும். இந்தப் பறவைகளின் கூடுகள் உருமறைவானவை. தரையில் தனது கால்களால் பள்ளம் தோண்டி மண் உருண்டைகளைச் சேகரித்துச் சேர்த்து அதனுள் முட்டை வைத்துவிடும். சாதாரணமாகக் காண்பது கடினமான ஒன்று.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும் ஆள்காட்டிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கும். முட்டைகள் தரையின் நிறத்திற்கேற்ப ஒன்றி விடுவதால் காண்பது சிரமம்.

இவற்றின் உணவு, மனிதனின் அன்றாட உணவுப் பொருட்களை அழிக்கும் புழு, பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளி போன்றவையே. அவற்றை உண்டு மனிதனுக்கு நன்மை பயப்பதோடு, நத்தைகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆள்காட்டிகள், ஆளை பிறருக்குக் காட்டுவதில் மட்டுமின்றி, ஆளை ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவை. முட்டைகளின் மீது ஒரு பறவை அடைகாக்கும்போது மற்றொன்று உயரமான இடத்தில் ஆட்கள் வருவதை மற்றொன்றுக்கு உணர்த்திவிட்டு மெல்ல நகர்ந்து எதிர் திசையில் அழைத்துச் சென்றுவிடும். மேலும் இரு பறவைகளும் சேர்ந்து கூடே இல்லாத இடத்தில் இருப்பது போன்று கத்திக்கத்தி தாக்குதல் நடத்தும். கூடு அன்மையில் உள்ளது போலவே கத்தும். ஆனால் கூடு எதிர் திசையில் இருக்கும். காடுகளில் ஆள்காட்டிகள் சப்தம் கேட்பதே அழகு. நாங்கள் எந்தப் பறவையைத் தேடிப் போனாலும் பார்பதற்கு ஏற்ற சூழல் அமையாமல் போவதற்கு ஆள்காட்டிகளே காரணமாகிவிடும். ஆகையால், காடுகளின் காவல்காரப் பறவைகள் என்றும் ஆள்காட்டிகளைக் குறிப்பிடலாம்.

Reply to this note

Please Login to reply.

Discussion

No replies yet.